வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் 74 டன் விதைகள் விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக விதை ஆய்வு துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் உரிமம் பெற்ற 130 அரசு விதை விற்பனை நிலையங்கள், 12 அரசு சார்பு விதை விற்பனை நிலையங்கள் மற்றும் 845 தனியார் விதை விற்பனை நிலையங்கள் இயங்கி வருவதாக தெரிகிறது. நடப்பாண்டில் இந்த நிலையங்களில் 4,125 முறை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 2,791 ஆய்வக விதை மாதிரிகள் மற்றும் 1,363 பணி விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட விதைகளில் ஆய்வின் மூலம் தேர்ச்சி பெறாத 52 குவியல்கள் மீது துறை நடவடிக்கையும், 4 விதை குவியல்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் குறைபாடுகள் கண்டறியப்பட்ட 49 விதை குவியல்களில் ரூ.26 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் 47.51 டன் விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆய்வில் தேர்ச்சி பெறாத 39 விதை குவியல்கள் மீது துறை நடவடிக்கையும், 5 விதை குவியல்கள் மீது நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் குறைபாடுகள் கண்டறியப்பட்ட 57 விதை குவியல்களில் ரூ.32,80,450 மதிப்பில் 26.69 டன் விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட 4 மாவட்டங்களிலும் ரூ.59,49,450 மதிப்பில் 74.2 டன் விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
காலநிலை பருவ மாற்றத்தால் பயிர்களின் முளைப்பு திறனிலோ அல்லது வளர்ச்சி நிலையிலோ பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே விவசாயிகள் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள விதை ரகங்களை மட்டுமே வாங்க வேண்டும். விதை விவர அட்டையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இருப்பு வைக்காமல் உடனடியாக விதைக்க வேண்டும். விதை கிரயத்திற்கான விற்பனை பட்டியலை விற்பனையாளர்களிடம் இருந்து பெற்று அவசியம் பராமரிக்க வேண்டும் என விதை ஆய்வு துணை இயக்குனர் எஸ்.ஆர்.பாலாஜி தெரிவித்துள்ளார்.
(மூலம்: 26-02-2025 நாளிட்ட தினத்தந்தி செய்தி)