பொது இ-சேவை மையத்தில், தனித்துவமான அடையாள எண் பெற விவசாயிகள் இலவசமாக பதிவு செய்யலாம் என்றும், பதிவு செய்ய 31-ந் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றை பெற விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்படுகிறது. விவசாய அடையாள எண் மூலம் வேளாண் பயிர்க்கடன், விவசாய இடுபொருட்கள், மழை மற்றும் வறட்சி நிவாரணம் வேளாண் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய உதவி திட்டங்கள், இதர துறைகளின் உழவர் நல திட்டங்கள் ஆகியவற்றைப் பெற முடியும்.
இனிவரும் காலங்களில் அரசு திட்டங்களில் பங்கு பெற்று பயன்பெற விவசாய அடையாள எண் முக்கியமானதாகும்.
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு தனி விவசாய அடையாள எண் ஏற்படுத்துவதற்கான முகாம் அந்தந்த கிராமங்களில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை அலுவலர்கள், சமூக வள நபர்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் மூலம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது அனைத்து பொது சேவை மையங்களிலும் இலவசமாக பதிவேற்றம் செய்து கொடுப்பதால் விவசாயிகள் பொது சேவை மையங்களை அணுகி தங்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதற்கு கட்டணம் ஏதும் இல்லை.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 907 விவசாயிகள் இருக்கும் நிலையில் இதுவரை 1 லட்சத்து 28 ஆயிரத்து 401 விவசாயிகள் மட்டுமே பதிவேற்றம் செய்துள்ளனர். மீதமுள்ள விவசாயிகள் வருகிற 31-ந் தேதிக்குள் உரிய ஆவணங்களைக் கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். பொது சேவை மையத்தில் இலவசமாக பதிவு செய்ய ஆதார் அட்டை, நிலபட்டா மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் ஆகியவற்றை கொண்டு செல்வது அவசியம்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.